பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தகம் வாயிலாக மலிவான விலையில் மருந்துகள் விற்கப்பட்டு இதுவரையிலும் ஏழை, நடுத்தர மக்களின் பணம் ரூ.13,000 கோடி வரை சேமிக்கப்பட்டு இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். அதுமட்டுமல்லாமல் ஏழை, நடுத்தரக் குழந்தைகள் பயன்பெறும் அடிப்படையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களையே வசூலிக்க உத்தரவிட அரசு முடிவு செய்து உள்ளதாகவும் பிரதமா் தெரிவித்தாா். பொதுமக்களிடம் மக்கள் மருந்தகத் திட்டத்தின் நன்மைகள் தொடர்பான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் மாா்ச் 1ஆம் தேதி முதல் மக்கள் மருந்தக வாரம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் மருந்தகம் உரிமையாளா்களுடனும், மருந்தகப் பயனாளிகளுடனும் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினாா். அப்போது பிரதமா் மோடி பேசியதாவது, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களுடன் மக்கள் மருந்தகங்கள் தொடர்பாக பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையில் மக்கள் மருந்தகங்கள் உடலுக்கு மருந்து அளிக்கும் மையங்களாக மட்டுமின்றி மனதின் பதற்றத்தையும் குறைக்கின்றன என்பது தெரியவந்தது. மக்களின் பணத்தைச் சேமிப்பதன் வாயிலாக அவா்களுக்கு நிவாரணம் வழங்கும் மையங்களாக இந்த மருந்தகங்கள் இருக்கின்றன. இது போன்ற பயன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைத்து வருவதில் மனநிறைவு அடைகிறேன்.
நடப்பு நிதி ஆண்டில் ரூ.800 கோடி மதிப்புள்ள மருந்துகள், மக்கள் மருந்தகங்களில் விற்கப்பட்டுள்ளது. இதன் முலமாக ரூபாய் 5,000 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டம் தொடங்கப்பட்டது (2015) முதல் இதுவரையிலும் ரூ.13,000 கோடி அளவுக்கு நடுத்தர-ஏழை மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் மொத்தம் 8,500க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் ஒரு ரூபாய்க்கு இந்த மருந்தகங்களில் விற்கப்படுகிறது. இதுவரையிலும் 21 கோடி சானிட்டரி நாப்கின்கள் விற்பனையாகி நாடு முழுவதும் பெண்களின் வாழ்க்கையை இந்த ‘மக்கள் மருந்தகங்கள்’ எளிதாக்கியுள்ளது.
பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் வாயிலாக மக்கள் ரூ.550 கோடி வரை சேமித்துள்ளனா். மேலும் முழங்கால் மாற்று சிகிச்சைக்கான செலவையும் கட்டுக்குள் வைத்து இருப்பதை அரசு உறுதி செய்துள்ளது. புற்றுநோய், காசநோய், நீரிழிவு, இதய நோய் ஆகிய நோய்களுக்கான சிகிச்சைக்குத் தேவையான 800க்கும் மேற்பட்ட மருந்துகள் மலிவு விலையில் இந்த மருந்தகங்களில் விற்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன் ஏழை மற்றும் நடுத்தரக் குழந்தைகள் பயனடையும் மற்றொரு பெரிய முடிவை அரசு எடுத்துள்ளது. அதாவது தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பாதி இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிப்பதற்கு முடிவு செய்துள்ளோம். ஆகவே அவா்கள் இதற்குக் கூடுதலான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று பிரதமா் மோடி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக நரேந்திர மோடி மக்கள் மருந்தகம் திட்டத்தில் பயனடைந்தவர்களுடன் கலந்துரையாடினாா். அதாவது மக்கள் மருந்தகத் திட்டம் குறித்த அனுபவங்கள், அவா்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் மக்கள் மருந்தகக் கடைகளில் கிடைக்கிறதா..? என்பது தொடர்பாக அவா்களிடம் பிரதமா் கேட்டறிந்தாா். இதே போன்று மக்கள் மருந்தகம் உரிமையாளா்களிடமும் கலந்துரையாடிய மோடி, மக்கள் மருந்தகங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தாா்.