ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றுக்கு இலவச ஆயுர்வேத மருந்து வாங்க பொதுமக்கள் குவிந்த கிருஷ்ணா பட்டிணத்தில் பொதுமக்கள் நுழைய அனுமதி இல்லை என அம்மாநில போலீசார் அறிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டிணத்தில் கொரோனாவிற்கு இலவசமாக வழங்கப்படும். ஆயுர்வேத மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா தொற்று சரியாகிவிடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மேலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று மக்கள் மருந்து வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் நாட்டு மருந்தை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றது. இதில் முதற்கட்ட பரிசோதனையில் இதை உட்கொள்ளும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் இதனால் கொரோனா தொற்று குணமாகுமா ? இல்லையா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் கூறியது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம் காரணமாக தற்போது அந்த கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வருவதைத் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக நாட்டுமருந்து வழங்கி வந்த இடம் வெறிச்சோடி காணப்படுகிறது.