ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி பலத்த காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆட்டோவில் இருந்த குக்கரை கைப்பற்றியுள்ளனர். அந்த குக்கரில் வயர்கள் கொண்ட சர்க்யூட் அமைப்பு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் ஆட்டோவில் வெடிபொருட்கள் எடுத்துச் சென்ற போது, வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது பற்றி சரியாக தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகினர். இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்கின்றனர். அந்த வகையில் நள்ளிரவில் சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து சோதனை செய்துள்ளனர்.