சென்னையின் பிரதான பகுதிகளில் இருக்கும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் போலீசார் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சென்னையில் தி நகர், வடபழனி, அடையாறு, அண்ணா நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் 151 மசாஜ் சென்டர்களில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுபடி சோதனை நடந்தது.
நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில், சட்ட விதிகளின்படி மசாஜ் சென்டர்களில் ஆண்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பெண்கள் மசாஜ் செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மசாஜ் சென்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையில் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தியதில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 மசாஜ் சென்டர் மீது வழக்குப்பதிவு செய்து சீல் வைத்துள்ளனர். மேலும் 8 மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து 6 இளம் அழகிகளை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.