டெல்லியின் ஜாமாமசூதி நிர்வாகம் அதன் வளாகத்திற்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்து இருக்கிறது. அண்மையில் மசூதியின் அலுவலகம் மசூதி வளாகத்துக்குள் இசையுடன் கூடிய வீடியோக்களை படமாக்க தடைவிதித்து இருந்தது. ஷாஹி இமாம் சையத் அகமது புகாரின் உத்தரவுப்படி பாரம்பரிய கட்டமைப்பின் வளாகத்தில் சில சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இம்முடிவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் “அம்மசூதிக்குள் பெண்கள் நுழைவதற்கு தடைவிதித்த முடிவானது தவறான ஒன்று. ஆகவே மசூதியின் இமாமுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன். பெண்கள் நுழைவதை தடைசெய்ய யாருக்கும் உரிமையில்லை” என அவர் டுவிட் செய்துள்ளார்.
பின் மசூதியின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா கான் கூறியதாவது, பெண்கள் தனியாக வரும்போது, மத ஸ்தலத்தில் முறையற்ற செயல்கள் காணப்படுவதாகவும், அத்தகைய நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் தடை விதிக்கப்படுவதாகவும் கூறினார். பெண்கள் தனியாக வரும் போது, முறைகேடான செயல்கள், வீடியோக்கள் வளாகத்தில் படமாக்கப்படுகிறது. இது போன்ற பழக்கங்களை நிறுத்தவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் மற்றும் திருமணமான தம்பதிகள் மசூதிக்கு வருவதற்கு எத்தடையும் விதிக்கப்படவில்லை என கூறினார்.