கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் 2022-23 நிதி ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுகளை சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்களது பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாரம்பரியமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை போன்றவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த கல்வி வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
அதன்படி தங்களது சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றி முன் மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் http://cuddalore.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனையடுத்து விண்ணப்ப படிவத்தில் தனி நபர், நிறுவன தலைவர் முறையாக கையொப்பமிட்டு 01.05.2023-க்குள் அதனை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்