தொழிலாளியின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் நெசவுத் தொழிலாளியான நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் பூட்டிய வீட்டு கதவை தட்டியுள்ளனர். அப்போது கண்விழித்து கீழே வந்த நாகராஜன் மீது மர்ம நபர்கள் மஞ்சள் பொடியை தூவியுள்ளனர்.
அதன்பின் நிலைதடுமாறி நாகராஜன் கீழே விழுந்ததும் மர்மநபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம், லேப்டாப் போன்ற பொருட்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.