ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 107 கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேற்று பல்வேறு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றுள்ளது. அந்தியூரில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 1100 பேர் தேர்வு எழுதியுள்ளனர் . இந்நிலையில் வரதநல்லூரை சேர்ந்த பட்டதாரியான ஹரிணி(24) என்பவருக்கும் வினோத் என்பவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஹரிணி தான் தேர்வு எழுத விரும்புவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த வினோத் தனது மனைவியுடன் காரில் தேர்வு மையத்திற்கு சென்றுள்ளார். அவர் தேர்வு எழுதும் வரை வினோத் வெளியே காத்து கொண்டிருந்தார். காலை 11 மணிக்கு தேர்வு முடிந்ததும் ஹரிணியுடன் வினோத் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதேபோல் மணக்கோளத்தில் மனைவியுடன் தேர்வு எழுத வந்த புதுமாப்பிள்ளை காலதாமதமாக வந்ததால் தேர்வு மையத்திற்குள் கண்காணிப்பாளர் அனுமதிக்கவில்லை.இதனால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.