திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவில் மகளிருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் வாக்கு சேகரிப்பில் பெண் வேட்பாளர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
மணப்பறை நகராட்சி மொத்தம் 27 வார்டுகளை கொண்டது. இதில் ஆளும் கட்சி திமுக, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு கட்சிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் 18 வார்டுகளில் 12 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். அதேபோல் அதிமுக போட்டியிடும் 26 வார்டுகளில் பெண் வேட்பாளர்கள் 15 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தங்கமணி 19-வது வார்டிலும், அவரது மனைவி மனோன்மணி 20-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
இதுகுறித்து மனோன்மணி கூறுகையில் நாங்கள் கண்டிப்பாக மக்களுடைய நலனில் அதிக அக்கறை எடுத்து போராடி பெண்களுக்காகவும், எங்களை நம்பி இருக்கக்கூடிய வார்டு மக்களுக்காகவும் நல்ல செயல்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து அவர்களுடைய வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபடுவோம்.
மணப்பாறை நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பில் மட்டும் மொத்தம் 28 பேர் பெண் வேட்பாளர்களாக உள்ளனர். இவர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் நகர்மன்றத்தில் பெண்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.