ஐதராபாத்தில் ஈஸ்வர ராவ்- அனுராதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுஜானாக்கும் (22), விசாகப்பட்டினம் மாவட்டம் பி.எம்.பாளையத்தை சேர்ந்த சிவாஜிக்கும்(25) அவர்களது பெற்றோர் திருமணம் செய்ய நிச்சயம் செய்து இருந்தனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று மாலை விசாகப்பட்டினத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் மங்கள வாத்தியங்கள் இசைக்க மணமக்களை குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துவந்தனர். அத்துடன் பாட்டுக்கச்சேரியுடன் ஆட்டம்-பாட்டம் என்று மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியானது களைக்கட்டியது.
இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு முகூர்த்த நேரம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் மணமக்கள் பட்டு உடைகள் அணிந்து மண மேடையில் உட்கார வைக்கப்பட்டனர். புரோகிதர் யாகம்வளர்த்து, மந்திரங்கள் ஓதிகொண்டு இருந்தார். அப்போது தாலிகட்டுவதற்கு முன்னதாக சீரகம்கலந்த வெல்லத்தை மணமகன், மணமகளின் தலை மேல் வைப்பது ஐதீகம் ஆகும். அந்த வகையில் சீரகம்கலந்த வெல்லத்தினை மணமகள் சுஜானாவின் தலையில் மணமகன் வைத்தார். இந்த நிலையில் மணமகள் திடீரென்று மண மேடையில் மயங்கி சரிந்து விழுந்தார். இதனை பார்த்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின் மணமகளை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மணமகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆகவே மணக் கோலத்திலிருந்த பெண்ணை பிணகோலத்தில் பார்த்ததால் அவரது பெற்றோர், மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். இது தொடர்பாக தகவல் அறிந்த விசாகப்பட்டினம் உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாசராவ் மற்றும் பி.எம் பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மணமகள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் சுஜானாவின் அறையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மணமகளின் பையில் விஷத்தன்மை உடைய காய்கள் இருந்தது. அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுஜானா திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்தாரா..? (அல்லது) காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா..? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் தற்கொலை செய்தாரா..? (அல்லது) இயற்கை மரணமா என தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு மண மேடையில், மணமகள் மயங்கி விழுந்து இறந்ததால் விழாக்கோலம் பூண்டிருந்த திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது.