சீன நாட்டில் பறக்கும் கார்கள் தொடர்பான சோதனை ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, சிச்சுவான் மாகாணத்தின் செங்டுவில் உள்ள தென் மேற்கு ஜியாடோங் பல்கலையின் சீன ஆராய்ச்சியாளர்கள் சென்ற வாரம் காந்தங்களை பயன்படுத்தி கண்டக்டர் ரயிலுக்கு மேலே 35 மில்லி மீட்டர் உயரத்தில் மிதக்கும் மாற்றியமைக்கப்பட்ட பயணிகள் கார்களுக்கான சோதனை ஒன்றை மேற்கொண்டனர்.
அவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்ட இந்த கார் காந்த லெவிடேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் 8 வாகனங்களை வலிமையான காந்தங்களுடன் வாகனத்தின் அடிப்பகுதியில் வைத்து 8 கி.மீ நீளமுள்ள தண்டவாளத்தில் அதை சோதனை மேற்கொண்டனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் 8 கார்களில் ஒன்று மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி பயணித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் மேம்பாட்டில் பணிபுரிந்த பல்கலைக்கழக பேராசிரியரான டெங் ஜிகாங், பயணிகள் கார்களுக்கு காந்த லெவிடேஷனைப் பின்பற்றுவது குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் அதிக தூரம் பயணத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார். கடந்த வருடம் ஷான்டாங் மாகாணத்திலுள்ள கிங்டாவோவில், மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் போகும் மாக்லேவ் புல்லட் ரயிலை சீனா அறிமுகப்படுத்தியது. இதே தொழில்நுட்பை பயன்படுத்தி கார்களையும், பறக்கும் கார்களாக்கும் ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.