இந்தியாவின் 75வது சுதந்திரதின விழா வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கென கடந்த ஓராண்டாக இந்தியா முழுதும் சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சுதந்திரப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களை நினைவுபடுத்தும் அடிப்படையில் “சுதந்திர ரயில் நிலையம் மற்றும் ரயில்” என்ற விழா நடத்தப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் சுதந்திர போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரயில் நிலையம் வாஞ்சி மணியாச்சியாகும். இந்த ரயில்நிலையத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான சுதந்திரப்போரில் கலெக்டர் ஆஷ்துரை என்பவரை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.
இச்சம்பவம் இந்தியா முழுதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ஆங்கிலேய அரசை கலக்கமடைய செய்தது. இந்நிகழ்ச்சி நடந்த மணியாச்சி ரயில் நிலையம் 1988ஆம் வருடம் வாஞ்சிமணியாச்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர போராட்ட நிகழ்வை போற்றும் விதமாக விழா நடத்துவதற்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. அந்த வகையில் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வரும் 23 ஆம் தேதி வரை சுதந்திர சின்னம் வாரவிழா கொண்டாடப்படுகிறது.
இதன் தொடக்க விழாவானது இன்று மாலை 5 மணிக்கு வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமை தாங்கி விழாவை துவங்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக வாஞ்சிநாதனின் இளைய சகோதரர் மகன் ஹரிகர சுப்பிரமணியம், அவரது மகன் ஆசிரியர் வாஞ்சிநாதன் போன்றோர் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி வாஞ்சிநாதன் குறித்த புகைப்படக் கண்காட்சி, புகழஞ்சலி, படக்காட்சி ஒளிபரப்பு, ஓரங்க நாடகம் போன்றவை நடக்கின்றன. இதனிடையில் விழா ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் செய்துள்ளனர்.