சந்தன மரத்தை கடத்திய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் கலெக்டர் பங்களா ஆகிய இடங்களிலிருந்து 4 சந்தன மரங்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது. அந்த மர்ம நபர்களை கைது செய்வதற்காக போலீஸ் சூப்பிரண்ட் கலைச்செல்வன் தனிப்படை அமைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள காலி நிலத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்த 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சரியாக பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் குழியை முழுமையாக தோண்டி பார்த்தனர். அங்கு அவர்கள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சந்தன கடத்தலில் ஈடுபட்டவர்கள் விஷ்ணு, உமாபதி, ராமேஸ்வரன், காளியப்பன் மற்றும் கண்ணாயிரம் என தெரியவந்துள்ளது. இவர்கள் ஐவரும் சேர்ந்து தர்மபுரியிலுள்ள 4 இடங்களில் சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்துள்ளது.
மேலும் குழியில் புதைத்து வைத்திருந்த சந்தன மரங்கள் கூடுதல் கலெக்டர் பங்களா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்களாவிலிருந்து வெட்டியது என்பது தெரியவந்துள்ளது. மேலும் 2 இடங்களில் வெட்டிய சந்தன மரங்கள் கோவிந்தசாமி என்பவரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் புதைத்து வைத்திருந்த சந்தனக்கட்டையை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவான கோவிந்தசாமியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.