கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.மரூர் கிராமத்தில் தே.மு.தி.க ஒன்றிய செயலாளரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நீலாவதி ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக இருக்கிறார். இந்நிலையில் சேகருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சத்தியமூர்த்தி சிலருடன் இணைந்து கிராமத்திற்கு அருகே கிராவல் மண் கடத்தியதாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தியை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சத்தியமூர்த்தி, சேகர் தான் புகார் அளித்திருப்பார் என கருதி தனது ஆதரவாளர்களான சிவப்பிரகாசம், பரசுராமன், சிவசக்தி, மணிகண்டன் உள்ளிட்டருடன் இணைந்து சேகரையும், அவரது உறவினர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சேகர் உறவினர்களான ராணி, சுமதி ஆகியோர் தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமூர்த்தி, மணிகண்டன், சிவசக்தி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சத்யமூர்த்தி அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து சேகரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.