இந்து மகாசபை கட்சியின் முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மகா சபையின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். இவர் பிற மதங்களை விமர்சித்து சர்ச்சையான கருத்துக்களை பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் புதுக்கடை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி புதுக்கடை காவல்துறையினர் பாலசுப்பிரமணியனை கைது செய்துள்ளனர். அதன்பிறகு பாலசுப்ரமணியனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் பாலசுப்பிரமணியனை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவலை அறிந்த தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இவர்கள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவமனைக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனையடுத்து பாலசுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.