தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 மதுக் கடைகளை நடத்தி வருகிறது. அதில் தினசரி 100 கோடி ரூபாய் மதிப்பிலான மதுவகைகள் விற்பனையாகிறது. இது விடுமுறை தினங்களில் 120 கோடி ரூபாயை தாண்டுகிறது. மதுக்கடைகளில் பணப் புழக்கம் அதிகமாக உள்ளதால் கள்ளநோட்டை கண்டறியும் கருவிகள் சில வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டன. இப்போது அவை பழுதாகி விட்டது. அண்மை காலமாக மது விற்பனை அதிகமுள்ள மாலை 6:00 முதல் இரவு 9:30 வரை, சிலர் கள்ளநோட்டை கொடுத்து மதுவாங்க முயற்சி செய்கின்றனர். அதிக கூட்டம் இருப்பதால் ஊழியர்களால் அதனை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் கள்ளநோட்டு குறித்து புகார் கொடுத்தால் காவல்துறையினர் ஊழியர்களை விசாரணைக்கு அழைத்து சென்று துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்க ஊழியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறியிருப்பதாவது, “மதுவிற்பனை அதிகமுள்ள நேரங்களில் கள்ளநோட்டை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. அதன்பின் வசூல்பணத்தை வங்கியில் செலுத்தும்போது கள்ளநோட்டை கண்டறிந்து அதனை வங்கி அதிகாரிகள் கிழித்து விடுகின்றனர். அப்பணத்தை ஊழியர்கள் செலுத்த வேண்டி இருக்கிறது. ஆகவே மதுக்கடையிலுள்ள ஊழியர்கள், காவல்துறையினரை ஒருங்கிணைத்து கள்ளநோட்டை கண்டுபிடிப்பது எவ்வாறு?, கள்ளநோட்டு பிடிபட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் வாயிலாக பயிற்சியளிக்க டாஸ்மாக்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.