தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் சென்ற வருடம் ஊரடங்கின் போது மதுக்கடைகளை திறந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினார். அந்த காணொளியை பதிவிட்டு அவர் எழுப்பிய கோஷங்கள் குறிப்பிட்டு “இதற்கு உங்கள் பதில் என்ன” என்று முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்விகள் எழுப்பி அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தமிழக அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு என்றும் அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.