ஆந்திர மாநிலத்தில் மதுபானங்களின் விலையை 20 சதவீதம் வரை குறைத்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கூடங்கள் மூடப்பட்டது. பின்னர் தொற்று குறைந்த பிறகு மீண்டும் மதுபான விற்பனை கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுபானங்களின் விலை 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இது மது பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள மது பிரியர்கள் விலை குறைவாக விற்பனை செய்யப்படும் மதுபான கடைகளை நாடினர். அந்த வகையில் ஆந்திர மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த மதுபான கடைகளில் ஆந்திரம் மாநில மது பிரியர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
அதாவது திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டது. இத்தகைய நிகழ்வு காரணமாக திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் வருமானம் அதிகரிக்க தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில அரசு தற்போது மதுபானங்களின் விலையை 20% குறைத்து அறிவித்துள்ளது. இந்த விலை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.