ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை அருகில் மில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களை வேனில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் புதுப்பட்டி தச்சன் குளம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஓட்டுநர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. இதுபோன்று பாதுகாப்பு இன்றி தொழிலாளர்களை அழைத்து செல்லும் ஓட்டுனர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.