தண்ணீர் என்று நினைத்து மதுவில் ஆசிட்டை கலந்து குடித்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் வி.அரியலூர் குச்சிப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தொழிலாளியான வாசுதேவன்(70) மற்றும் காவணிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் மணிபாலன்(45). இவர்கள் 2 பேரும் கடந்த 24-ம் தேதி வி.அரியலூர் குச்சிப்பாளையம் செல்லும் பாதையில் ஆழாங்கால்பாலம் அருகில் ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது போதை அதிகமாக இருந்த நிலையில் மீண்டும் மது குடிப்பதற்காக தண்ணீர் இல்லை என்பதால் அருகில் இருக்கின்ற கோழி பண்ணைக்கு சென்று அங்கிருந்த பாட்டிலில் திராவகத்தை தண்ணீர் என்று நினைத்து மதுபானத்தில் கலந்து குடித்து உள்ளார்கள். அதன்பின் சிறிது நேரத்திற்குள் அவர்கள் இருவரும் அந்த இடத்தில் மயங்கி விழுந்து கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர்.
இத்தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வாசுதேவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மணி பாலனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.