மதுபோதையில் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள பருத்திப்பள்ளி நாடார் தெருவில் உமாசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி பட்டறை தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு சிவாம்பிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு உமாசங்கரும் அவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த கோபி என்பவரும் குடும்பத்துடன் இணைந்து அப்பகுதியில் உள்ள கோவிலில் பொங்கல் வைத்துள்ளனர்.
இதனையடுத்து உமாசங்கரும், கோபியும் மது அருந்திவிட்டு கோவில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கோபி தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நண்பர் என்றும் பாராமல் உமாசங்கரை சரமாரியாக குத்தியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக உமாசங்கரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் உமாசங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உமாசங்கரின் மனைவி சிவாம்பிகா எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நண்பரை கொலை செய்த கோபியை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது