ஜனவரி முதல் மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை தொடங்கப்படும் என்று மதுரை எம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,
“விமான நிலையத்தின் ஓடுபாதை மேம்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு 34 கோடி தற்போது ஒதுக்கப்பட்டு அந்தப் பணி வருகிற ஜூன் மாதம் துவங்கி ஆறு மாதத்தில் நடக்கும். ஓடுபாதை மேம்படுத்தும் பணி இரவு நேரத்தில் தான் செய்ய முடியும்.
எனவே இந்த ஆறு மாதத்தில் டிசம்பரில் ஓடுபாதை மேம்படுத்தும் பணி முடிந்துவிட்டால் ஜனவரியில் இரவு நேர போக்குவரத்துக்கான விமான நிலைய பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் இந்த கூட்டத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் இழப்பீடு தொகையானது ரூபாய் 54 கோடி தற்போது கொடுக்கப்பட்டிருக்கிறது. 916 நபர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொடுப்பதைவிட மூன்று மடங்கு தொகை இந்த ஏழு மாதத்திற்குள் கொடுத்திருக்கிறோம்.
மாவட்ட நிர்வாகம் இந்த முயற்சியில் முழுமையாக இறங்கி செயல்பட்டிருக்கிறது. அதேபோல் இன்னும் பலருக்கு கொடுக்க வேண்டியுள்ளது. அந்த பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெறும். முறையாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட நிர்வாகமும் இந்த பணிக்கான பரிசீலினையை நடத்தும்” இவ்வாறு கூறினார்.