கோவில் நகரமமாம் மதுரை மாநகரின் பிதாமகன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அஞ்சாநெஞ்சன் என்றெல்லாம் அழைக்கப்படும் திரு மு க அழகிரி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தயாளு அம்மாள் தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு ஸ்டாலின் தமிழரசு என்கிற இரண்டு சகோதரர்களும் செல்வி ஒரு சகோதரியும் உள்ளார். பள்ளி படிப்பை முல்லுரிலும் கல்லூரிப் படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும் படித்து பி.ஏ பட்டமும் பெற்றார்.
கல்லூரிப் படிப்பை முடித்த இவர் 1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 நாள் காந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் அழகிரியை சமாளிக்க முடியாமல் சிங்கபூருக்கு அனுப்பினார் கலைஞர். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்தவரை 1980ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகையை கவனிக்க சென்னையிலிருந்து மதுரைக்கு அனுப்பினார். அதுமுதல் மதுரையிலேயே தங்கி விட்ட அழகிரிக்கு மதுரையே நிரந்தர இருப்பிடமானது. 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியை கைப்பற்றிய போது மதுரையில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் ராயல் வீடியோ போன்றவற்றை தொடங்கினார் அழகிரி.
தந்தை கருணாநிதி கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் கடவுளை மறுப்பவராகவும் இருக்கும் நிலையில் அதற்கு முற்றிலும் மாறாக திரு அழகிரி அவர்கள் கடவுள் மேல் அளவு கடந்த நம்பிக்கையும் பக்தியும் உடையவராக இருக்கிறார். இவரும் இவரது மனைவி காந்தி அழகிரியும் திரு அழகிரியின் 61 பிறந்தநாளில் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு ஒரு பசுவை தானமாக அளித்தனர்.குடும்பத்தில் மூத்த மகனாக திரு.அழகிரி இருந்தபோதிலும் திராவிட முன்னேற்றக் கழக நிவாகத்தில் இளைய மகனான திரு மு.க.ஸ்டாலினுக்கே அதிக முக்கியதுவம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கட்சியின் அடுத்த முதல்வர் பதவிக்கு ஸ்டாலினையே முன்மொழிந்து வந்தார் தலைவர் மு.கருணாநிதி.
இதனால் கலைஞரின் குடும்பத்தில் கருத்து வேறுபாடும் சலசலப்பும் ஏற்பட்டது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த இவர் 2009ஆம் ஆண்டு நடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரு சி.மோகனுக்கு எதிராக போட்டியிட்டு 1 லட்சத்து 4௦௦௦௦க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாட்டின் 15வது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 2009-ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுக்கான மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக பதவி வகித்தார் இவர்.
67 வயது நிரம்பியுள்ள மு.க.அழகிரி தயாநிதி என்ற மகனும் கயல்விழி அஞ்சுக செல்வி என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர். கொலைவழக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கு பத்திரிக்கை அலுவலகத்தை சூறையாடிய வழக்கு நில அபகரிப்பு வழக்கு என ஏராளமான வழக்குகளை சந்தித்த போதிலும் இன்றும் மதுரையின் ராஜாவாக மதுரைக்கே பாஸ்ஸாக கம்பிரமாக வலம் வருகிறார் இந்த அழகிரி.