நீர் மேலாண்மையில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு மார்தட்டிக் கொள்ளும் நிலையில் 14 ஆண்டுகளாக குடிநீரின்றி தவிப்பதாக மதுரை தனக்கன்குளம் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் உள்ள வெண்கலம் மூர்த்தி நகரில் கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 170 வீடுகள் கட்டப்பட்டு 170 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் பழுதடைந்த நிலையில் சில போராட்டங்களுக்கு பின்னர் தற்காலிக குடிநீர் தொட்டி அமைத்து விநியோகம் செய்யப்பட்டது.
எனினும் கடந்த சில மாதங்களாக நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்க படுவதாகவும் வீட்டுக்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதால் அன்றாட வாழ்க்கை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நள்ளிரவு முதல் வரிசையில் நின்று தண்ணீர் பிடித்து செல்வதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.