மதுரையில் நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை போல மதுரையிலும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 மணி வரை இந்த முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக உள்ள மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு , மேற்கு ஊராட்சி ஒன்றியம் , பரவை பேரூராட்சி, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் இந்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று நள்ளிரவு முதல் பொதுமுடக்கமா ? என்ற குழப்பம் எழுந்த நிலையில் இன்று நள்ளிரவு கிடையாது நாளை நள்ளிரவு முதல் தான் மதுரையில் உள்ள சம்மந்தப்பட்ட பகுதியில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.