மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொட்டாம்பட்டி கிராமத்தில் பொதுசுகாதாரத் துறையின் சார்பில் 31வது கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அமைச்சர் பி.மூர்த்தியும் சென்றனர். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது “மதுரையில் இதுவரையிலும் 12 -14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் தவணை தடுப்பூசியை 87.7 % பேரும், 2ஆம் தவணை தடுப்பூசியை 55.9 % பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். 15 -17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் தவணை தடுப்பூசியை 89.4 % நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசியை 74.4 % நபர்களும் போட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் 65 ஆயிரத்து 253 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 910 தடுப்பூசிகள், தமிழ்நாடு மாநில அளவில் 76 லட்சத்து 89 ஆயிரத்து 40 தடுப்பூசிகள் என போதிய கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திலுள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போன்று தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனைகள் விரைவில் பயன்பாட்டிற்கு துவங்கி வைக்கப்படும். அதேபோல் புதியதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் கட்டுவதற்கான பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரை நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று உள்ளது. இதனிடையில் எய்ம்ஸ்மருத்துவமனை கட்டிடத்திற்கான வரைபடம் கூடியவிரைவில் வெளியிடப்பட்டு 5 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளானது துவங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் தற்போது தினசரி 2,500 -2,700 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. எனினும் கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மருத்துவத்துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே செப்டம்பர் மாதம் இறுதிக்குள் 1,021 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 4,308 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.