தமிழகத்தோடு அடிக்கல் நாட்டப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் கால தாமதம் ? என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நிறைவடைய உள்ள நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், கட்டுமான பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஊடகங்களில் செய்திகள் வெளியானதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்லபாண்டியன், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 222 ஏக்கர் நிலப்பரப்பு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதனை ஒப்புக் கொண்ட மத்திய அரசு வழக்கறிஞர், ஜப்பான் நிறுவனத்துடன் கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் மற்றும் கடன் பெறும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தவறான தகவலைத் தந்த அந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது ? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழகத்தோடு அடிக்கல் நாட்டப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் காலதாமதம் ஏன் ? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.