மதுரை – தேனி அகல ரயில் பாதையில் ரயிலை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
சென்னையில் மதுரை – போடி வழித்தடத்தில் தேனி வரை அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடக்க விழா மற்றும் மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் மதுரை – தேனி அகல ரயில் பாதையில் ரயில் காணொளி காட்சி மூலம் கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார். இதனையடுத்து மதுரை ரயில் நிலையத்தின் 6வது பிளாட்பாரத்தில் பெரிய திரையில் சென்னையில் பிரதமர் பங்கேற்று கொண்ட நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாக செய்யப்பட்டுள்ளது.
அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் ராஜூ, கோ. தளபதி, எம்.பூமிநாதன், ரயில்வே கோட்ட மேலாளர் அனந்து ஆகியோர் கொடியசைத்தும் மதுரையிலிருந்து சிறப்பு ரயில் தேனிக்கு கிளம்பியது. இந்த நிகழ்ச்சியில் முதுநிலை வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, கட்டுமான பிரிவு துணை தலைமை என்ஜினீயர் நந்தகோபால், முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், முதுநிலை கோட்ட எஞ்சினியர் நாராயணன், முதுநிலை கோட்ட சிக்னல் மற்றும் தொலைதொடர்பு என்ஜினியர் ராம்பிரசாத், கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் வி.ஜே.பி அன்பரசு ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் பாதுகாப்பு படை உதவி கமிஷனர் சுபாஷ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார்கள். இந்த சிறப்பு ரயிலில் பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தார்கள். மேலும் ரயில் பாதையில் அமைந்துள்ள ஊர்களிலிருந்து வேலை பார்க்கும் ரயில்வே பணியாளர்கள் ஆர்வமுடன் நேற்று இந்த ரயில் பயணம் செய்தார்கள். இந்த ரயில் பாதையில் ரயில் நிலையங்களில் டிக்கட் வழங்குதல், பார்சல் சேவை, பறக்கும்படை டிக்கெட் பரிசோதகர்கள் ஆகிய ஏற்பாடுகளை கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் செய்தார். வழக்கமான ரயில்கள் இன்று காலை முதல் முறையாக இயங்கும்.