மதுரையில் 27 இடங்களில் புயல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை மன்னார் வளைகுடா பகுதியை கடந்த பிறகு டிசம்பர் 4ஆம் தேதி தென்தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கிறது.
இந்நிலையில் தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தென் தமிழகத்தில் கன மழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மதுரையில் பாதிக்கக் கூடிய பகுதிகள் என 27 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 300 இடங்களில் தண்ணீர் தேங்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.