மதுரை மத்திய சிறையில் 1800-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் திறமைக்கு தகுந்தாற்போல் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். அதாவது கைதிகள் மூலமாக ஆபிஸ் கவர், பேக்கரி உணவுப் பொருட்கள், மருத்துவ பேன்ட்ஸ், இனிப்பு வகை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த பொருட்களை விற்பதன் மூலமாக நிர்வாகத்திற்கும், கைதிகளுக்கும் வருமானம் கிடைக்கிறது. வெளிச்சந்தையில் இந்த பொருட்களை விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
ஆனால் இது குறித்து எந்தவிதமான அறிக்கையும் நிர்வாகத்தில் இருந்து தெரிவிக்கப்படாத நிலையில் சிறையில் அதிகாரிகளால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருசில மோசடி நடைபெற்றது உண்மை என்று தெரியவந்தது. மேலும் அங்கு பணி செய்து வரும் சிலரிடம் இது தொடர்பான பணத்தை சிறை நிர்வாகம் பிடித்தம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறை துறை டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி மதுரை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து சிறையில் பணியாற்றிய 9 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.