மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மதுரை நகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2021- 22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தற்போது 10 லட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கல் ஒழுங்குபடுத்தி திட்டமிட, நகரங்கள் அமைவதை உறுதி செய்ய, புதிய நகர வளர்ச்சி குழுக்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 1972 ஆம் ஆண்டு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அடிப்படையாகக்கொண்டு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நகர வளர்ச்சி குழுமத்தை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மதுரை நகர வளர்ச்சி குழுமத்தை அமைத்திட அரசாணை வெளியிடப்பட்டது. இது மதுரையின் வளர்ச்சிக்காக கொடுக்கும் திட்டம் வருங்கால வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் .நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் தலைமையிலான இந்தக் குழு மாநகரின் அனைத்து துறைகளின் வளர்ச்சியின் தேவையை எதிர்நோக்கி திட்டத்தை தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.