Categories
பல்சுவை மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை மீனாட்சி அம்மன்” கட்டிடக்கலையின் சிறப்புகள்…. கோவிலின் வரலாறு குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்புகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக மீனாட்சி அம்மனும், சோமசுந்தரேஸ்வரரும், சொக்கநாதரும் இருக்கின்றனர். இந்த கோவிலில் சித்திரை திருவிழா, நவராத்திரி, ஆவணி மூல திருவிழா, தை தெப்ப திருவிழா, ஆடிப்பூரம் என பல்வேறு விசேஷ நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதன் காரணமாக மீனாட்சி அம்மன் திருக்கோவில் பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் சுந்தரேஸ்வரர் சுவாமியின் மேலே உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது ஆகும். இந்த கோவிலில் இருக்கும் நடராஜர் சிலை மற்ற கோவில்களில் இருப்பது போன்று இடது காலைத் தூக்கி நடனமாடாமால்  வலது காலைத்தூக்கி நடனமாடும். இந்த கோவிலில் நடராஜர் இருக்கும் இடம் பஞ்சசபைகளில் ஒன்றான வெள்ளி சபை ஆகும்.

இந்தக் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளம் சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தால் ஊன்றி தோன்றிய குளம் ஆகும். இந்தக் குளத்திற்கு சிவகங்கை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த கோவில் தேவாரப்பாடல் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில் 192- வது தேவாரத்தலம் ஆகும். அதேப்போன்று 51 சக்தி பீடங்களில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் ராஜமாதங்கி சியாமள சக்தி பீடம் என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் சங்க காலத்தில் கட்டப்பட்டதாகும். இது 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தக் கோவிலில் உள்ள சுவாமி கோபுரம் 1168 முதல் 1175-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இதனையடுத்து ராஜகோபுரம் 1216-ம் ஆண்டு முதல் 1228-ம் ஆண்டு வரை கட்டப்பட்டதாகும். அதன்பிறகு அம்மன் சன்னதி கோபுரம் 1627 முதல் 1628-ம் ஆண்டு வரை கட்டப்பட்டதாகும். இதைத் தொடர்ந்து 1372-ம் ஆண்டு சுவாமி சன்னதி கோபுரமும், 1374-ம் ஆண்டு சுவாமி சன்னதி வெஸ்ட் கோபுரமும், 1452 ஆம் ஆண்டு ஆறுகால் கோபுரமும், 1526-ம் ஆண்டு 100 கால் மண்டபமும், 1559-ம் ஆண்டு தெற்கு ராஜகோபுரம் மற்றும் முக்குருணி விநாயகர் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

அதன்பிறகு 1560-ம் ஆண்டு சுவாமி சன்னதி நார்த் கோபுரமும், 1562-ம் ஆண்டு தேரடி மண்டபம், 1563-ம் ஆண்டு பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நடராஜர் மண்டபம், 1554-72-ம் ஆண்டு வடக்கு ராஜ கோபுரம், 1564-72-ம் ஆண்டு வெள்ளி அம்பாள் மண்டபம், கொலுமண்டபம், 1569 -ம் ஆண்டு இதர கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், 53 நாயன்மார்கள் மண்டபம், 1570-ம் ஆண்டு அம்மன் சன்னதி மேற்கு கோபுரம், 1611-ம் ஆண்டு வீர வசந்த ராயர் மண்டபம், 1513 -ம் ஆண்டு இருட்டு மண்டபம், 1623-ம் ஆண்டு கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம், 1623-59-ம் ஆண்டு அஷ்ட சக்தி மண்டபம், ராயர் கோபுரம், 1626-45-ம் ஆண்டு புது மண்டபம், 1535-ம் ஆண்டு நகரா மண்டபம், 1645-ம் ஆண்டு முக்குருணி விநாயகர், 1659-ம் ஆண்டு பேச்சியம்மாள் மண்டபம், 1708-ம் ஆண்டு மீனாட்சி நாயக்கர் மண்டபம், 1975-ம் ஆண்டு சேர்வைக்காரர் மண்டபம் போன்றவைகள் கட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மிக பிரம்மாண்டமான மண்டபம் ஆகும். இந்த மண்டபம் 1494-ம் ஆண்டு மதுரையை ஆண்ட முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் கட்டப் பட்டதாகும். இது ஆயிரங்கால் மண்டபம் என அழைக்கப்பட்டாலும் இதில் மொத்தம் 985 தூண்கள் மட்டுமே இருக்கிறது.

இங்குள்ள 22 சிறிய தூண்கள் இசை எழுப்பக் கூடியதாகும். இந்த கோவிலில் இருக்கும் அனைத்து சிலைகளின் அமைப்பும் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும்  விளக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் மதுரை மீனாட்சி அம்மனிடம் நாம் பக்தி உணர்வோடும் முழு மனதோடும் எதை வேண்டினாலும் அந்தத் தாய் செய்வாள் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கையாக இருக்கிறது.

Categories

Tech |