ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எண்ணூர் பகுதியில் சரவணன் (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது அடிதடி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவாகி இருக்கிறது. இவருக்கு திருமணம் ஆகி புவனேஸ்வரி என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன் எண்ணூர் அனல் மின் நிலையத்தின் நுழைவு வாயிலின் முன்பாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இது தொடர்பாக எண்ணூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சரவணன் ரகு என்பவரிடம் குடிப்பதற்கு மது கேட்டுள்ளார்.
ஆனால் ரகு மது இல்லை என கூறியதால், சரவணனுக்கும் ரகுவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறிது நேரம் கழித்து ரகு சரவணனிடம் குடிப்பதற்கு மது கிடைத்துவிட்டது என்று கூறி, காரில் கத்திவாக்கம் மேம்பாலம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சரவணனை ரகு மற்றும் அவருடைய கூட்டாளிகள் கொடூரமான முறையில் அடித்து தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் விசாரணையில் காவல்துறையினருக்கு தெரிய வரவே, பாலகிருஷ்ணன், சதீஷ்குமார், அரவிந்த், கோபிநாத் மற்றும் ரகு உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் வழக்கில் தலைமறைவாக இருக்கும் அஜய் என்பவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.