சென்னையை அடுத்த பல்லாவரம் பஜனை கோயில் தெருவில் பெயிண்டராக வசித்து வந்தவர் சின்னதுரை (29). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். தினசரி பகலில் வேலைக்கு போகும் சின்னதுரை இரவில் பம்மல் பிரதான சாலையிலுள்ள நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம் ஆகும். அப்போது சின்னதுரைக்கும் அதே இடத்தில் படுத்து உறங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது திடீரென்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா, நண்பர் சின்னதுரையை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்கென ராஜா, சின்னதுரை உறங்கும்வரை காத்திருந்தார். அதன்பின் நள்ளிரவில் அவர் உறங்கியதும் ராஜா அருகில் கிடந்த பெரியகல்லை எடுத்து சின்னதுரையின் தலையில் போட்டார்.
இதனால் சின்னதுரை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் சின்னதுரை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்ப இடத்திற்கு விரைந்து சென்று கொலையான சின்னதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.