குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே குச்சிராயன்விளை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் தனது நண்பருடன் சேர்ந்து கொடுமுடி கரையாகுளத்தின் படித்துறையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ரமேஷ் எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷின் நண்பர் குளத்தில் இறங்கி ரமேஷை மீட்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை.
இதுகுறித்து குளச்சல் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் குளத்தில் இறங்கி ரமேஷின் உடலை மீட்டனர். அதன்பிறகு ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.