மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால் கோபத்தில் தந்தையை வெட்டி கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர் பகுதியில் வசித்து வந்தவர் 45 வயதுடைய ராமு. இவருடைய மனைவி ரேணுகா. இவர்களுக்கு 20 வயதுடைய தினேஷ் என்ற மகனும், 15 வயதுடைய திவ்யா என்ற மகளும் உள்ளார்கள். ராமு ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். ரேணுகா சிப்காட்டில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். தினேஷ் பிளஸ் டூ முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன தினேசை கடந்த ஆண்டுதான் மேல்மருவத்தூர் அருகில் அவருடைய குடும்பத்தினர் கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டி வந்துள்ளனர்.
மேலும் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் கடந்த மாதம் அவரை சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கின்ற மறுவாழ்வு மையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ் மூன்று தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்துள்ளார். மறுவாழ்வு மையத்திலிருந்து வந்த முதல் நாளே குடிப்பதற்குப் பணம் கேட்டு பெற்றோரிடம் சண்டை போட்டார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடிக்க பணம் கேட்டு தந்தை கொடுக்கவில்லை என்பதால் தினேஷ் பிரச்சனை செய்தார்.
அதன்பின் தந்தை ராமு மாடிக்கு சென்று படுத்து தூங்கினார். மறுநாள் காலை மாடிக்கு சென்ற தினேஷ் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை ராமுவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பித்து சென்று விட்டார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஸ்ரீபெரும்புதூர் இளநீர் குளம் அருகில் மறைந்திருந்த தினேசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.