கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளை என்னும் பகுதியை சேர்ந்தவர் அருமைநாயகம். இவர் மகன் சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன் போன்றோர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34) அஜித் ராம் (34),பிரதீப் (32), ஸ்டாலின் (31) போன்றோர் காரை நடுவழியில் நிறுத்தி இருந்ததாக கூறப்படுகின்றது.
இவர்களைப் பார்த்து சேகர் காரை வழியை விட்டு நிறுத்துமாறு கூறியுள்ளார். அப்போது நான்கு பேரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் மது அருந்துவதற்கு சேகரிடம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகின்றது. அதற்கு சேகர் பணம் எதுவும் தர முடியாது என தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி உள்ளது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
கலைந்து சென்ற நான்கு பேரும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து சேகரின் வீட்டிற்குள் புகுந்து கார் கண்ணாடி மற்றும் சிசிடிவி கேமரா போன்றவற்றை அடித்து உடைத்துள்ளனர். இதனை தடுத்த சேகர் மற்றும் உறவினர் அஜயன் போன்றோரை அவர்கள் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றிருக்கின்றனர். உறவினர்கள் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட நால்வரையும் கைது செய்திருக்கின்றனர்.