நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போது பண்டிகை காலங்கள் அதிகம் வருவதால் சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரியில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு வழக்கம்போல் அமலில் இருக்கும். மேலும் இரவு நேர ஊரடங்கு தவிர பிற நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தேநீர் பழக்கடைகள், பழச்சாறு கடைகள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில்லறை மது கடைகள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையும், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.