கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றனர். கண்டக்டராக உதயகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இரண்டு பேர் பேருந்தில் ஏறி ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்ததால் சக பயணிகள் முகம் சுழித்தனர். இதனை கவனித்த ஓட்டுநரும், கண்டக்டரும் பேருந்தில் அமைதியாக பயணிக்கும்படி இருவரிடமும் கேட்டுக் கொண்டனர். அதனை கண்டு கொள்ளாமல் இரண்டு பேரும் தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் நெகமம் அருகே இருவரையும் கீழே இறக்கி விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் திருப்பூரைச் சேர்ந்த ஒருவரை செல்போன் மூலம் அழைத்தனர். அந்த நபர் அங்கு வந்தவுடன் மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் நெகமம் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுனர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருப்பூரை சேர்ந்த தனுஷ் குமார், ஸ்டீபன் ராஜ், பக்ருதீன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.