பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் முன்கூட்டியே அது குறித்து ஆலோசிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பிரதமர் மோடி அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நடக்கவிருந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை நடக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் தமிழ்நாடு சார்பில் ஒருவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.