மத்திய அரசு பொறுப்பற்ற மற்றும் பாரபட்சமான தடுப்பூசி கொள்கையை பின்பற்றி வருவதாக பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு விலை உயர்வு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பல பிரச்சனைகள் நடந்து வருகின்றது. இவற்றிற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு தடுப்பூசிக்கு மூன்று விலையா என கேள்வி எழுப்பியுள்ளார். புதிய தடுப்பூசி கொள்கை மூலமாக 18 முதல் 45 வயதிற்குட்பட்ட மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்குவதற்கான பொறுப்பை இந்திய அரசு கைவிட்டுள்ளது . இது நமது இளைஞர்களுக்கான அரசாங்கத்தின் பொறுப்பை முழுமையாக கைவிடுவதாகும் என்று அவர் கூறினார்.
மேலும் மத்திய அரசின் தவறான கொள்கை முடிவால் சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு ரூபாய் 150 க்கும், மாநில அரசுக்கு ரூபாய் 400 க்கும், தனியாருக்கு ரூபாய் 600க்கும் விலையை நிர்ணயம் செய்துள்ளது. மக்கள் மருந்துக்காக ஒரு பெரும் தொகையை செலவிடும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பொறுப்பற்ற மற்றும் பாரபட்சமான தடுப்பூசி கொள்கையை பின்பற்றுவதாக சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.