தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு தேர்வாணையத்தால் மத்திய அரசு போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் 45,284 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.சி போன்ற தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சி.எச்.எஸ்.எஸ்.எல் தேர்வுக்கு 4,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் வயது வரம்பு 18 முதல் 27 வரை இருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக வருகிற ஜனவரி 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடருக்கு 5 வருடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு 3 வருடங்களும் வயது சலுகை உண்டு. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள http://ssc.nic.in முகவரியை அணுகி கொள்ளவும். பல்நோக்கு பணியாளர்களுக்கான தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக இந்த போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதில் வாரம்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அலுவலக வேலை நாட்களில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள WHATSAPP எண்ணான 9942503151 தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.