மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுப்போம் என்ற தலைப்பில் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்தியத்தொகுப்புக்கு தமிழக அரசு வழங்கும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்தமாய் புறக்கணிக்கப்பட்டிருப்பது நாடெங்கும் பெரும் கொந்தளிப்பையும், எதிர்ப்பலையையும் உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பிற கட்சிகள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிய இட ஒதுக்கீட்டை முறையாக வழங்க மத்திய அரசிற்கு உத்திரவிடக்கோரி வழக்கினைத் தொடர்ந்துள்ளன. அதன் தீர்ப்பு விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில் நாடே அதனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
முற்பட்ட வகுப்பினருக்கான பத்து சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்பட்டு உரிய முறையில் தொடர்ந்து வழங்கப்படும்போது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இடஒதுக்கீடு பொருந்தாது எனக்கூறி, வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை மத்திய அரசு மறுத்து வருவது மாபெரும் சமூக அநீதி; இது பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமத்தர்மத்தை நிலைநிறுத்தும் மனுநீதி.
கடந்த 2007 ஆம் ஆண்டு மத்தியில் ஆண்ட அன்றைய திமுக – காங்கிரசு கூட்டணி அரசு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தவறியதிலிருந்து தற்போது அதிமுக – பாஜக கூட்டணிவரை அதனை மறுத்து வருவது அநீதியை அரங்கேற்றி வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது. மத்தியில் ஆளும் அரசுகள் நிகழ்த்தும் இந்த மானுட அநீதியை எதிர்த்து குரல் கொடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் முழுமுதற்கடமையாகும்.
ஆகவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வருகிற சூலை 27 ஆம் தேதி உயர்நீதிமன்ற அளிக்க இருக்கிற தீர்ப்பில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்’ சார்பில் வருகிற சூலை 26ஆம் தேதி முன்னெடுக்கப்படும் அறப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அன்போடு அறிவுறுத்துகிறேன். அதன்படி, அன்றைய நாள் காலை 11 மணியளவில் அவரவர் வீட்டுவாசலில் சமூக இடைவெளியோடு கோரிக்கை முழக்கங்களைத் தாங்கிய பதாகைகளைக் கையிலேந்தி தங்கள் எதிர்ப்பினை அறவழியில் உலகிற்குக் காட்ட வேண்டும் எனவும், மண்ணின் மக்களின் ஒருமித்த எதிர்ப்புக்குரலானது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி நீதிமன்றத்தின் காதுகளிலும் எட்டி, சமூக நீதிக்கான கதவுகளைத் திறக்கும் சாவியாக அமைய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.