மத்திய அரசு இந்த வருடம் முதல் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் சூழ்நிலையில், மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 240 நாட்கள் மட்டும் சம்பள விடுப்பு பெற்று வருகின்றனர். ஆனால் புதிய தொழிலாளர் குறியீட்டில் இது, 300-ஆக அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளுடன் புதிய தொழிலாளர் குறியீட்டு விதிகளில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன. அதன்படி வேலை நேரம், ஆண்டு விடுமுறை, ஓய்வூதியம், பிஎப் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலுள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் 4 குறியீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய விதிகளில் சம்பளம், சமூகப் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலை ஆகிய அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் ஒவ்வொரு மாநிலத்துடனும் ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ரமேஷ்வர் தெலி தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.