பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் 30 அன்று, விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 3 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் மூலமாக சுமார் 1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த கூடுதல் DA தவணையானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி இந்த அதிகரிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான சமீபத்திய அறிவிப்பிற்கு பின், வழக்கமாக ஜூலை மாதம் நிர்ணயிக்கப்படும் அடுத்த DA உயர்வு குறித்த சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது, ஜூலையில் திட்டமிடப்பட்ட DA உயர்வு அறிவிக்கப்படாமல் போகலாம் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை ஆண்டுக்கு ஜனவரி மற்றும் ஜூன் என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. இப்போது 2022 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சில ஊடக அறிக்கைகள், ஜூலை மாதத்தில் இரண்டாவது திருத்தம் வர வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். அதாவது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஏஐசிபிஐ இன்டெக்ஸ் புள்ளிவிவரங்கள், DA மறுசீரமைப்பு முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் டிசம்பர் 2021 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, தொடர்ந்து இரண்டு மாதங்களாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டிசம்பர் 2021ல், AICPI எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. ஆனால், ஜனவரி 2022ல், அது 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக இருந்தது.