மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி (HRA) உயர்வு அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் பென்ஷன் வாங்குவோருக்கு அகவிலை நிவாரண உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்த்தியிருக்கிறது. மேலும் இந்த நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டம் டெல்லியில் மார்ச்-30 ல் நடைபெற்றது.பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.9,544.50 கோடி செலவினம் ஏற்படும் எனவும், 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் பணவீக்கம் 6.07 விழுக்காடாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி (HRA) உயர்வையும் வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.முன்னதாக 2021 ஜூலை மாதம் வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டது.
அண்மையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடியாக வீட்டு வாடகை படியும் உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கணிசமாக உயரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் வீட்டு வாடகை படி தொகை அந்தந்த நகரத்துக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. அந்த வகையில் X நகரங்களுக்கு 24%, Y நகரங்களுக்கு 16%, Z நகரங்களுக்கு 8% என்ற அடிப்படையில் வீட்டு வாடகை படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் X நகரங்களுக்கு 5400 ரூபாய்க்கு மிகாமலும், Y நகரங்களுக்கு 3600 ரூபாய்க்கு மிகாமலும், Z நகரங்களுக்கு 1800 ரூபாய்க்கு மிகாமலும் வீட்டு வாடகை படி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.