மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதாவது, 18மாதம் அகவிலைப்படி நிலுவைத்தொகை பாக்கி பற்றி கூடியவிரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர் சங்கம் கொடுத்த அழுத்தத்தின்படி, இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க அமைச்சரவை செயலர் காலஅவகாசம் அளித்துள்ளார். நவம்பர் மாதம் இறுதியில் மத்திய அரசு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கக்கூடும் என கூறப்படுகிறது.
DA நிலுவைத்தொகை குறித்து கலந்து ஆலோசிக்க அமைச்சரவை செயலாளருடனான சந்திப்புக்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும் நிலுவைத்தொகையை வழங்க அரசு ஒப்புக்கொண்டதா?.. இல்லையா?.. என்பது குறித்த தெளிவான அறிவிப்பு எதுவும் இன்னும் அரசு சார்பாக வரவில்லை. DA நிலுவைத்தொகைக்கு முன்பே ஒரு முறை அரசு மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக மத்திய அரசானது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நிறுத்தியது. பின் கொரோனா பரவல் சற்று சீரடைந்த நிலையில், ஜூலை 2021 முதல் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
இருப்பினும் மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் 3 தவணைகளின் நிலுவைத்தொகையைப் பெறவில்லை. இந்த கால அளவில் டிஆர் 11 சதவீதம் ஆக இருக்கிறது. இதற்கிடையில் 18 மாதங்களுக்கான நிலுவைத்தொகையை அரசு வழங்கவில்லை. கொரோனா காரணமாக 18மாத காலத்துக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைபடி நிவாரணம் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. அத்தியாவசியமான பிற பணிகளில் இத்தொகை செலவழிக்கப்பட்டதால், இதன் நிலுவைத்தொகை வழங்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக குறைவு என அரசு ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.
ஜூலை-2021 முதல் அரசு அகவிலைப்படியை மீண்டுமாக உயர்த்த துவங்கியது. தற்போது அரசாங்கம் அவ்வப்போது டிஏ-வை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்கள், பொதுத் துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இவற்றில் லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவை ரூபாய்.11,880 முதல் ரூ.37,000 வரை இருக்கிறது. லெவல்-13 ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகையாக ரூபாய்.1,44,200 -ரூ.2,18,200 வரை கிடைக்கும்.