விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகர பா.ஜ.க துணை தலைவராக இருப்பவர் பாண்டியன் (60). இந்நிலையில் மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சுரேஷ்குமாரும், செயலாளர் கலையரசனும் பாண்டியனின் இரண்டு மகன்களுக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பாண்டியன் கடந்த 2017-ஆம் ஆண்டு சுரேஷ்குமார் மற்றும் கலையரசனிடம் 7 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து பாண்டியன் கேட்டபோது சுரேஷ்குமார் ரயில்வே துறையில் வழக்கு இருப்பதால் தாமதமாவதாகவும், தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வேலையை பெறுவதற்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சுரேஷ்குமார் கேட்ட 4 லட்ச ரூபாய் பணத்தை பாண்டியன் கொடுத்துள்ளார். அதன் பிறகும் அவர்கள் வேலை வாங்கி கொடுக்காததால் பாண்டியன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் 11 லட்ச ரூபாய் மோசடி செய்த கலையரசனை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.