மத்திய அரசு பணித் தேர்வுக்கு,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தமிழக அரசு சார்பாக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால், பல்வேறு துறையில், பல்நோக்கு பணியாளர், பெண் படைப் பயிற்றுநர், மருத்துவ உதவியாளர் என 3,261 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் விருப்பம் உள்ளவர்கள் www.ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25ஆம் தேதி கடைசி நாள். இதில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் நியமனம் பெற ஏதுவாக போட்டித்தேர்வுக்கான அனைத்து பாட குறிப்புகளும் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடி அல்லது இணையவழியாக நடத்தப்பட உள்ளது. தேர்வு எழுதுவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.