சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த வகுப்புகள் சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலக முகப்பு அருகே படிப்பு வட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசால் 4,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் வருகிற 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலைநாடுனர்கள் மேற்காணும் தேர்வுக்கு இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அப்படி விண்ணப்பித்துக் கொள்ள முடியாதவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று தங்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வரும் பட்சத்தில் மேற்காணும் தேர்வுக்கு விண்ணப்பம் செய்து தரப்படும்.
இதற்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற 14-ஆம் தேதி முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 04575-240435 இந்த அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.